அனைத்து பாதைகளும் ஸ்வாமியையே அடைகிறது

இந்த குறிப்பிட்ட தரிசனக் காலம் முழுவதும், எல்லாம் வல்ல இறைவனை நோக்கிய வேண்டுதல்கள் நிறைந்த பக்தர்களின் எதிரொலி நிரம்பியிருக்கிறது. அனைத்து பாதைகளும் ஸ்வாமியின் உறைவிடத்தையே அடைகிறது. ஸ்வாமியை தரிசிக்கும் மன உறுதி, கடும்குளிரையும், கடினமான பாதையைக் கொண்ட நிலப்பரப்பையும் கடந்து செல்லும் துணிவை ஒவ்வொரு ஸ்வாமிக்கும் கொடுக்கும். ஒவ்வொரு பக்தருக்கும், அறியாமை இருள் நீக்கும் ஐயப்பனே காரியமும், நோக்கமுமாகும்.

ஸ்வாமி ஐயப்பனை தரிசிக்கும் வழியானது, கற்களும் முட்களும், அடர்ந்த காடுகளின் குளிர்காற்றும், கடினமான முகடுகளும் நிறைந்தது. கருவறைப் புனிதனான ஸ்வாமியை தரிசிப்பதே இந்த கடினமான பயணத்தின் நோக்கமாகும். இந்த கடினமான பயணமும் எளிமையும், துன்பம் தரக்கூடிய ஏழு காரணிகளை துறப்பதற்காகவே மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு ஸ்வாமியும், இறைவனுக்கான காணிக்கைகள் அடங்கிய மூட்டையான இருமுடியை தனது தலையில் சுமந்து செல்வார்கள். அந்த இருமுடி துறவையும், தியாகத்தையும் குறிக்கிறது.

பக்தர்களுக்கான முதல் நிறுத்தம் எருமேலி. இந்த எருமேலியில்தான், ஸ்வாமி வில்லாளனாக இருந்து அரக்கி மஹிஷியை வதம் செய்ததாக நம்பப்படுகிறது. எருமை வடிவம் எடுத்து பூமியில் அச்சத்தை ஏற்படுத்திய மஹிஷியை, ஸ்வாமி ஐயப்பன் வதம் செய்ததாக நம்பப்படுகிறது. இங்கு மஹிஷி உயிர் நீத்த “ருத்ரகுளம்” காணப்படுகிறது. அந்த இரவில் ஐயப்பன் தங்கிய வீடும் இங்கே உள்ளது. சமீபத்தில், இந்த வீடு தீப்பிடித்தபொழுது, கட்டுப்படுத்த முடியாத தீயிலிருந்து வாள் சேதமில்லாமல் காப்பாற்றப்பட்டது.

“பேட்டைத்துள்ளல்” என்னும் சடங்குமுறை நடனம் பக்தர்களால் ஆடப்படுகிறது. கடந்த காலத்தில், இந்த நடனத்தை தனு மாதத்தில் ஆடக்கூடாது எனும் கட்டுப்பாடு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது, மாதாந்திர பூஜைகளின்போதும் ஆடப்படுகிறது. தற்காலத்தில், அந்த நடனத்தை ஆடுவதற்காக சடங்குமுறை உடைகள் அணிந்து பக்தர்கள் நடப்பதைக் காண முடியும்.அந்த சிறிய கோவிலில் வழிபட்ட பிறகு, பக்தர்கள் வாவர் மசூதிக்குச் சென்று வழிபடுவர். அந்த மசூதியில் இருந்து பெரிய கோவிலுக்குச் செல்லும்பொழுது, மத வேறுபாடு களைந்துவிடுகிறது. பேட்டைத்துள்ளலுக்குப் பிறகு, ஒவ்வொருவரும் தன்னிடத்தில் ஒரு அம்பை வைத்துக்கொள்ள வேண்டும். அம்பை வைத்திருப்பது ஐயப்பனின் படையில் ஒரு பகுதியாக இருப்பதைக் குறிக்கும்.

கோட்டப்படியைக் கடந்து பேரூர்தோடுவில், பக்தர்கள் சிற்றாறில் ஸ்நானம் செய்வர். மஹிஷியை வதம் செய்த பிறகு, ஐயப்பனைக் காண வந்த சிவபெருமான் ‘காலகெட்டி’ எனும் இடத்தில் உள்ள மரத்தில் தனது காளையைக் கட்டி வைத்ததாக நம்பப்படுகிறது. பக்தர்கள், காலக்கெட்டியில் அந்தக் கோவிலை தரிசித்த பிறகு, அழுதா ஆற்றைக் கடப்பார்கள். இதற்குப்பின் வனத் திருடன் உதயனனின் கோட்டையான கரிமலாவை நோக்கி பாதை செல்கிறது. கரிமலாவை கடந்து, புனித நதி பம்பாவில், இறந்த முன்னோர்களை நினைத்து மரியாதை செலுத்துவர். இங்கு தடைகள் அனைத்தையும் அகற்றும் ‘பம்பா கணபதி’யை தரிசிக்கலாம். அதற்குப் பிறகு, நீலிமலை மற்றும் அப்பாச்சிமேடுவைக் கடந்து ஸ்வாமியின் உறைவிடத்தை அடையலாம். வழியில், எருமேலியில் இருந்து கொண்டு வரும் அம்புகள் சரம்குத்தியில் போடப்படவேண்டும்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள், இறைவனை நோக்கிய ஆழ்ந்த பக்தியுடனும், துதிக்கும் கோஷங்களுடனும் வாழ்வின் சுழற்சியிலிருந்து தம்மை மீட்கக்கூடிய, முக்தி மற்றும் மோட்சத்தை குறிக்கும் புனிதப் படிகளில் ஏறுவர். மனித மனத்தின் சிக்கல்களைக் குறிக்கும் கடினமான பாதைகள் மற்றும் கணக்கிலடங்காத சிரமங்கள் கொண்ட காட்டுப் பாதையை கடந்து சிந்தையின் தெளிவிற்கு இருப்பிடமான ஐயப்பனை தரிசிக்கலாம். உலக வாழ்வின் வடிவங்களான ‘பூதங்களையும்’ ‘கணங்களையும்’ ஆள்பவரும், அனைத்து உலக துன்பங்களிலிருந்து விடுபட்டவரும், ‘அபய முத்திரை’யுடன் விளங்கும் தூய்மை மிகுந்தவருமான ஐயப்பன், அமைதியையும், முக்தியையும் வேண்டும் பக்தர்களுக்கு அவற்றை அருள்வார். ஆன்மிக சாகரத்தில் ஒரு துளியாக கலந்த பிறகு, உங்கள் இருப்பை மறந்து, முக்காலங்களையும் மறந்து ‘ஸ்வாமியே சரணம் ஐயப்பா’ என்னும் மூன்று வார்த்தைகளுக்குள் வாழ்வீர்கள்.