எருமேலி முதல் 18 புனிதப் படிகள் வரை

 சபரிமலைப் பயணத்தின்போது, பக்தர்கள் தரிசிக்க வேண்டிய முக்கிய தலங்கள் பின்வருமாறு:

எருமேலி
சபரிமலைக்குச் செல்லும் அனைத்து பக்தர்களும் எருமேலிக்குச் செல்வர். மஹிஷி வதம் செய்யப்பட்ட தலமும், மத நல்லிணக்கத்துக்கான இடமும் ஆகும். இங்கு வந்த பிறகுதான் ஐயப்பனால் மஹிஷி வதம் செய்யப்பட்டார் என்று நம்பப்படுகிறது.

அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் சடங்குமுறை நடனமான ‘பேட்டைத்துள்ளல்’ நடனம் பக்தர்களால் ஆடப்படுகிறது. பக்தர்கள் தங்கள் முகத்தில் வண்ணம் பூசி, பலவகை காய்கறிகள் செருகப்பட்ட போர்வையை தோளில் போர்த்தி இந்த நடனத்தை ஆடுவார்கள். இசை மற்றும் நடனத்துடன் பேட்டை தொடரும். எருமேலியைச் சுற்றியுள்ள ஐயப்பன் கோவிலை அடைந்த பிறகு இது முடிவுறும்.

காட்டுவழி மலையேற்றம்
பேட்டைத்துள்ளலுக்குப் பிறகு, பக்தர்கள் தங்கள் பயணத்தை காடுகள் வழியாக தொடர்வார்கள். தன் பக்தர்களை காட்டு விலங்குகளிடமிருந்து காக்குமாறு பணிக்கப்பட்ட வாபரின் கோட்டப்படியை அடைவார்கள்.

பேரூர்தோடு
வனத்தில் இருந்தபொழுது ஐயப்ப ஸ்வாமி இங்கிருக்கும் சிற்றாற்றில் ஓய்வெடுத்ததாக நம்பப்படுகிறது. பக்தர்கள் குளிக்கவும், ஓய்வெடுக்கவும் இந்த இடத்திற்கு செல்வார்கள்.

இரும்பூனிக்கரை
இங்கு இரண்டு கோவில்கள் இருக்கின்றன. பக்தர்கள் இங்கு ப்ரார்த்திப்பது மட்டுமல்லாமல், ஓய்வும் எடுத்துக்கொள்வர். தேக்கு மரங்களின் ஊடாக மலையேற்றப்பாதை தொடரும். இங்கு சில கடைகளும் உள்ளன.

காலகெட்டி
மஹிஷியின் வதத்தைத் தொடர்ந்து, ஐயப்பனைக் காண வந்த சிவபெருமான் தனது காளையை இங்குள்ள மரத்தில் கட்டியதாக நம்பப்படுகிறது. இங்கு ஒரு சிவன் கோவில் உள்ளது.

அழுதா
அழுதா என்னும் இடத்தில் வீடுகள் பல உள்ளன. அந்த ஆழமான ஆற்றைக் கடந்தால், புலிகள் சரணாலயம் ஒன்று உள்ளது. கடினமான மலையேற்றத்துக்கு தண்ணீருடன் தயாராக இருக்க வேண்டும். ஆற்றின் மறுகரையில் சில தர்ம ஸ்தாபனங்கள் அன்னதானம் அளிக்கின்றன. அழுதா நதியில் குளித்து முடித்த பின்பு ஒவ்வொரு ஸ்வாமியும் ஒரு கல்லை எடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடர வேண்டும்.

அழுதாமேடு
இந்த பகுதி செங்குத்தாக இருப்பதால் கடப்பது மிகவும் கடினமானது. இது அழுதா நதிக்கரையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கல்லிடம்குன்னு
வதம் செய்யப்பட்ட மஹிஷியின் உடல் கல்லிடம்குன்னுவில் வீசப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த உடல் மூடப்பட்டதால், அங்கிருக்கும் மக்களுக்கு ப்ரச்சனையை ஏற்படுத்தாது என நம்பப்படுகிறது. அதன் பிரதிபலிப்பாகவே, அழுதாவிலிருந்து கொண்டு வந்த கல்லை பக்தர்கள் இங்கு வீசுகின்றனர்.

இஞ்சிப் பாறகோட்டை
இது பக்தர்களின் ஓய்விடமாகும். பக்தர்கள் இங்கு சமைத்துக்கொள்ளலாம்.

கரியிலந்தோடு
பக்தர்கள் பயணத்தில் மகிழ்ச்சியடையும் விதமாக, இந்த காடுகளின் அழகு இருக்கும். சில பக்தர்கள் இங்கு ஓய்வு எடுப்பர்.

புதுசேரி – முக்குழி
பக்தர்கள் வன விலங்குகளிடமிருந்து அகன்று, இங்கு பாதுகாப்பாக இரவைக் கழிக்கலாம். இங்கு ஓய்வு எடுத்துவிட்டு மலையேற்றப் பயணத்தைத் தொடரலாம்.

கரிமலை
கரிமலையின் எட்டு அடுக்கை ஒரே நடையாக எவரும் கடந்து விட முடியாது. அங்கங்கு ஓய்வு எடுத்த பின்னரே அது சாத்தியமாகும். மலையின் உச்சியில் கரிமலைநாதன் கோவில் அமைந்துள்ளது. இங்கு குளங்களும், கிணறுகளும் காணப்படுகின்றன. இந்த மலையில் இருந்து கீழிறங்குவது கடினம் என்பதால், மிகவும் எச்சரிக்கையுடன் இறங்குவது அவசியம்.

வலியானவட்டம்
இது சமநிலப்பகுதி. ஆகவே ஓய்வெடுப்பதற்கு உகந்த இடமாகும். இங்கு இறந்த முன்னோர்களின் ஆன்மாவிற்கு சமைத்து படையலிடுவர். ஆதி காலத்தில் இதுவே பம்பை என்று அழைக்கப்பட்டது. இங்கிருந்து சபரிமலைக்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று பம்பைக்கு மாற்று வழி, மற்றொன்று பம்பையின் ஊடாக செல்லும் வழி.

பம்பை
காட்டு வழிப்பாதையின் அனைத்து சிரமங்களின் சோர்வும், பம்பை நதியில் நீராடினால் தீர்ந்துவிடும். இங்கு சடங்குகளும், தரிசிக்க வேண்டிய கோவில்களும் அதிகம். கூட்டம் அதிகமாக இருந்தாலும், வாகனங்களில் இங்கு விரைவில் வந்துவிடலாம்.

நீலிமலை
மலைப்பாதை செங்குத்தாக இருப்பதால், வேகம் குறைவாகவும், நிதானத்துடனும் செல்ல வேண்டியது அவசியம். இங்கிருக்கும் மருத்துவ வசதிகளை முடிந்த அளவு பயன்படுத்திக்கொள்ளலாம்.
அப்பாச்சிமேடு
இறை நண்பனான கடுரவன், தீய சக்திகளின் தலைவனாக விளங்கும் இடம் இது. அத்தீய சக்திகளை ப்ரார்த்தித்து விட்டு நடக்க வேண்டிய இடமிது. செங்குத்தான இடம் என்பதால் கவனம் தேவை.

சபரிபீடம்
சபரிபீடம், சபரி தவம் செய்து முக்தி பெற்ற இடமாகும்.

மரக்கூட்டம்
கோவில் தரிசனத்திற்கான வரிசை, பெரும்பாலும் இங்கிருந்து துவங்கும்.

சரம்குத்தி
ஐயப்பனும், அவரின் படைகளும் தங்கள் ஆயுதத்தை இங்கு விட்டுச்சென்றதாக நம்பப்படுகிறது. எருமேலியிலிருந்து கொண்டு வரும் அம்பை, பக்தர்கள் இங்கு விட்டுச்செல்வார்கள்.

பதினெட்டு படிகள்
தலையில் இருமுடியில்லாமல் பதினெட்டு படிகளை கடக்கக் கூடாது. தேங்காயை உடைத்துவிட்டு ஐயப்ப நாம கோஷத்துடன் படிகளில் ஏற வேண்டும்.

தரிசனம்
கொடிக்கம்ப கூட்டத்தை தவிர்த்து விட்டு மேலிருந்து ஸ்வாமியை தரிசிக்கலாம்.

மல்லிகாபுரம்
மல்லிகாபுரத்தம்மனையும் மற்ற தெய்வங்களையும் இங்கு வணங்கலாம்.